தமிழகத்தில் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டுமானால், 1971ம் ஆண்டு இயற்றப்பட்ட நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 3 அடுக்குகளுக்கு மேல் (தரைத்தளம் உள்பட) உள்ள கட்டிடத்தை கட்ட உத்தேசிக்கும் நபர், கட்டிட பொறியாளர் / வடிவமைப்பாளர் மூலமாக கட்டிட வரைப்படம் தயார் செய்து அதை நகர் ஊரமைப்புதுறையின் மாவட்ட அலுவலகத்திலோ அல்லது இயக்குனர் அலுவலகத்திலோ திட்ட அனுமதி (Plan Permission) வேண்டி உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறான விண்ணப்பங்களின் பேரில் அனுமதி வழங்கும் முன், பொது மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், அதனை உரிய முறையில் தெரிவிக்க வேண்டி தினசரி நாளிதழ்களில் பொது அறிவிப்பு கொடுக்கப்படும். திட்ட அனுமதி விண்ணப்பம், வரைபடம், மற்றும் இதர ஆவணங்களை பரிசீலனை செய்து இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, நில வகைப்பாடு, மற்றும் நிலத்தின் சுற்றுப்புற அமைப்புகளையும் ஆராய்ந்த பின்னர், உள்ளாட்சிக்கு ஒப்படைக்க வேண்டுய சாலை, பார்க், உள்ளிட்டவைக்கான திறந்தவெளி நிலங்களை (OSR lands) தான பத்திரம் பதிவு செய்து ஒப்படைத்து, நில பரப்பளவிற்கு ஏற்றவாறு திட்ட அனுமதிக்கான கட்டணம் செலுத்திய பின்பு, திட்ட அனுமதிக்கான ஒப்புதல் வழங்குவர். இதனை அரசிதழில் (government gazette) வெளியிடுவர்.
நிலத்தை பொறுத்தவரையில், வில்லங்க விசாரனைகள் அனைத்தையும் சட்டப்படி சரிபார்த்து, நகர் ஊரமைப்பு துறையினர் திட்ட அனுமதி கொடுத்த பின்னர், கட்டிட அனுமதிக்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சிதுறை அலுவலகம் எடுக்க வேண்டும். இதற்கான நடைமுறைகள் பின்வருமாறு. கட்டிடத்திற்கான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, வாகனம் நிறுத்தும் வசதி, பேரிடர் காலங்களில் மீட்புப்பணிக்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்த பின்னர், கட்டிட அனுமதி வழங்குவர். கட்டிட பணிகள், திட்ட மற்றும் கட்டிட அனுமதிகளை மீறாமல் கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளதை உறுதி படுத்திக் கொண்ட பின் கட்டிட பூர்த்தி சான்றிதழ் (completion certificate) வழங்குவர். பூர்த்தி சான்றிதழின் அடிப்படியிலேயே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட கட்டிட பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து இணைப்புகளும் வழங்கப்படும்.
மேற்கண்ட சட்ட நடைமுறைகளுக்கு எதிராக சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் விதி மீறல்கள் செய்தும், உரிய அனுமதியே இன்றியும் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு, நில ஆக்கிரமிப்பு போன்ற பல சட்ட விரோத நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன . இதற்கு எதிராக அரசு அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை வில்லை எனில், இவ்வாறு அனுமதி இன்றியும் விதிகளை மீறியும் கட்டப்படும் கட்டிடங்களை இடிக்க கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. உயர்நீதி மன்றத்தில் வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனி நீதிபதி நீதிமன்றம், இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றம் ஆகியவை செயல்படுகின்றன. இதில் விதி மீறல் / அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிப்பதற்கு தாக்கல் செய்யப்படும் வழக்குகள் இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சில் விசாரனை செய்யப்படும். நீதிபதிகளும் இது போன்ற கட்டிடங்களை இடிப்பதற்கும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்.
பல ஆண்டுகள் உருண்டோடும். அனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. ஏனெனில் உயர்நீதிமன்றத்தின் இவ்வாறான உத்தரவுகளை எவரும் மதிப்பதில்லை. எனவே இது போன்ற சட்ட விரோத கட்டிடங்களுக்கு எதிராக எவ்விதமான இடிப்பு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்க மாட்டார்கள்.
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி மக்களை ஏமாற்றுவர்.
மேலும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு வழங்கவே கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். பின்னர் இதே உயர்நீதிமன்றம் சட்ட விரோத கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு வழங்க சொல்லி முரண்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கும்.
இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் 1990-ஆம் ஆண்டுக்குப்பின் உயர்நீதிமன்றத்தில் திறந்து வைத்துள்ள கீழ்க்கண்ட கட்டிடங்கள், எதுவுமே திட்ட அனுமதி, கட்டிட அனுமதி என எந்த அனுமதியும் பெறாத சட்ட விரோத கட்டிடங்கள் ஆகும்.
11 அடுக்கு மாடி கொண்ட ஆவண கட்டிடம்
7 அடுக்கு வழக்கறிஞர் (கூடுதல்) அறைகள் கட்டிடம்
4 அடுக்கு மகளிர் நீதிமன்ற கட்டிடம்
4 அடுக்கு மாற்றுமுறை தீர்வு கட்டிடம்
4 அடுக்கு கூட்டுறவு உணவு விடுதி கட்டிடம்
3 அடுக்கு ஆடிட்டோரியம் கட்டிடம்
3 அடுக்கு ரிட் மனு கட்டிடம்
3 அடுக்கு பார் கவுன்சில் கட்டிடம்
3 அடுக்கு உயர்நீதிமன்ற புதிய கட்டிடம்
3 அடுக்கு வங்கி / போஸ்ட் ஆபீஸ் கட்டிடம்
3 அடுக்கு காவல் கட்டுப்பாட்டு அறை
3 அடுக்கு புதிய நூலகம்
3 அடுக்கு சட்ட உதவி மைய கட்டிடம்
இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று CMDA (சென்னை பெருநகர வளர்ச்சி குழும) அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதில் சிறப்பு என்னவென்றால் தலைமை நீதிபதி தலைமையில் 5 உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கட்டிடக்குழு ஒன்றினை அமைத்து இந்த நீதிபதிகளே திறப்பு விழா நடத்தி உள்ளார்கள். ஒரு புறம் சட்ட விரோத கட்டிடங்களை நீதிபதிகளே திறப்பார்களாம், இன்னொரு புறம் சட்ட விரோத கட்டிடங்களை இடிக்க அதே நீதிபதிகள் உத்தரவிடுவார்களாம்.
இந்த சட்ட விரோத கட்டிடங்கள் குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயலட்சுமி முதலமைச்சருக்கு அனுப்பிய புகாரில், இந்தக் கட்டிடங்கள் அனைத்தையும் இடித்துத்தள்ளுமாறு கோரி உள்ளார்.
சமீபத்தில் நான் சந்தித்த ஒரு முன்னாள் நண்பர் (இன்னாள் நீதிபதி), அநியாயத்தையும் ஊழலையும் எதிர்க்கும் ஒருவன் முதலில் தான் தூய்மையானவராக இருக்க வேண்டும் என்று கூறினார். இதே கூற்றினை நீதிமன்றமும் கட்டிட வழக்குகளிலேயே சொல்லி இருக்கிறது.
அந்த நண்பரின் கூற்றுப்படியே பார்த்தால் உங்கள் (முதலமைச்சர்) மீது வழக்கு தொடுத்து தண்டனை வழங்கிய நீதித்துறைக்கு இருக்கும் தூய்மையின் லட்சணம் இது தான். நீதித்துறையின் தவறுகளை உணர்த்துவதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும், சரியான நடவடிக்கை, இந்த 13 சட்ட விரோத நீதிமன்ற கட்டிடங்களை இடிப்பதே ஆகும்.
செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ???
தொடரும் …..
Leave a Reply